×

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்காவிட்டால் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

பள்ளிபாளையம், ஏப்.23: கூலி உயர்வு ஒப்பந்தகாலம் முடிந்து 22 மாதங்களாகியும் பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடிக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் வரும் 29ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்காவிட்டால், வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.நாமக்கல் மாவட்ட சிஐடியூ விசைத்தறி தொழிற்சங்க நிர்வாக குழு கூட்டம் பள்ளிபாளையம் காவேரி தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்டதலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் அசோகன், நிர்வாகிகள் ஆறுமுகம், குமார், காசிவிஸ்வநாதன் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ஒப்பந்தகாலம் முடிந்து 22 மாதங்களாகியும் குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை. 75 சதவீதம் கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது கண்டிக்கதக்கது. சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் வரும் 29ம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையிலும் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்காமல் இருந்தால், வரும் 1ம் தேதி முதல் குமாரபாளையத்தில் உள்ள அனைத்து பகுதி தொழிலாளர்களையும் திரட்டி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என்றனர்.

29ம்தேதி பேச்சுவார்த்தை

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, நேற்று சேலம் தொழிலாளர் நலஉதவிஆணையர் கோடீஸ்வரி முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, 29ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையையும் தறி உரிமையாளர்கள் புறக்கணித்தால் ஸ்டிரைக் நடைபெறும் என தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், ஸ்டிரைக் நோட்டீசை உதவி ஆணையரிடம் வழங்கினர்.

Tags : keyluck owners ,wage hike ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து