×

மலைக்கோயிலில் திருமணத்தின் போது தேனீக்கள் விரட்டி கொட்டியதால் மணமக்கள் அலறியடித்து ஓட்டம்

நாமக்கல், ஏப்.23: நாமக்கல் அருகே, மலை கோயிலில் நடந்த திருமணத்தில், ஊதுபத்தி புகையால் தேன்கூடு கலைந்து, தேனீக்கள் கொட்டியதால், மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டி முருகன் மலைக்கோயிலில், பெருமாபட்டியை சேர்ந்த விஷ்ணு, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமித்ரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பகல் 12 மணிக்கு திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. ஐயர் மந்திரங்கள் சொல்லிக் கொண்டு, ஊதுபத்திகளை கொளுத்தினார். அப்போது, கோயில் உள்பிரகாரத்தின் கூரையில் கட்டியிருந்த தேன்கூட்டில், ஊதுபத்தி புகை பட்டது.

இதில், தேனீக்கள் கலைந்து, அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கியது. வலி தாங்க முடியாமல், திருமணத்திற்கு வந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதைக் கண்ட மணமக்களும், மணமேடையில் இருந்து இறங்கி, மலை அடிவாரத்திற்கு ஓட்டம்பிடித்தனர். சிறிது நேரத்திற்கு பின், தேனீக்கள் விரட்டப்பட்டன. இதையடுத்து, முகூர்த்த நேரம் முடிவதற்குள் மணமகன், அவசர,அவசரமாக மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இதனை தொடர்ந்து, தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தவர்கள், கல்யாணத்திற்கு வந்த வேனிலேயே மதியம் 2 மணியளவில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை தொடர்ந்து, அவர்கள் திரும்பிச்சென்றனர். மணக்கோலத்தில் புதுமண தம்பதி சகிதமாக, உறவினர்கள் கூட்டமாக வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : bride ,mountains ,wedding ,
× RELATED இப்தார் நோன்பு திறப்பு