×

பைபாஸ் சாலையில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

காரைக்குடி, ஏப்.23: பைபாஸ் சாலையில் வீடுகளில் இருந்து எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளை தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனங்கள் கொட்டுவதால் தெற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர். வீடுகளில் உள்ள செப்டிக் டேங் கழிவுகளை அகற்ற மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளன. வீட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற இந்நிறுவனங்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வாங்குகின்றனர். செப்டிக் டேங்க் கழிவுகளை எடுக்கும் தனியார் நிறுவனங்கள் அதனை முறையாக அகற்றாமல், காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பைபாஸ் சாலையில் ஓரங்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை மற்றும் மதிய நேரங்களில் கொட்டி விட்டு சென்று விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வருவதோடு கழிவுநீரில் உள்ள கிருமிகள் காற்றில் கலந்து அதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

சமூக ஆர்வலர் பழனியப்பன் கூறுகையில், வீட்டு செப்டிக் டேங்க் கழிவுநீரை அகற்ற பல்வேறு நகராட்சிகளில் வாகனங்கள் உள்ளது. ஆனால் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ள காரைக்குடி நகராட்சியில் இதுவரை வாகனம் இல்லை. இதனால் மக்கள் தனியாரை நம்பியே உள்ளனர். கழிவுநீர் அகற்ற அதிக கட்டணம் வாங்குவது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் பயன் இல்லை. தனியார் நிறுவனங்கள் கழிவுநீரை அகற்ற முறையான நடவடிக்கைகளை கையாளுவது இல்லை. காட்டு பகுதியிலும் மக்கள் அதிகளவில் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். சூரக்குடி பைபாஸ் சாலையில் இதுபோன்று ஏற்கனவே கொட்டிய போது பொதுமக்கள் திரண்டு லாரியை சிறைபிடித்தனர். அதன்பிறகு கொஞ்சகாலம் கொட்டாமல் இருந்தனர். தற்போது மீண்டும் துவங்கி உள்ளனர். சாலை ஓரங்களில் கொட்டுவதால் வாகனங்களில் செல்லும் போது கடுமையான துர்நாற்றம் வருகிறது. செப்டிக் டேங்க் கழிவுகள் மற்றும் கழிவுநீரை இரவு நேரத்தில் அகற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் இவர்கள் காலை, மதியம் என அனைத்து வேளைகளிலும் அகற்றுகின்றனர். நகராட்சி அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வது இல்லை.

Tags : Bypass road ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு