×

இளையான்குடி சந்தைகளில் கார்பைட் மாம்பழம் விற்பனை ேஜார்

இளையான்குடி, ஏப்.23: இளையான்குடி பகுதிகளில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனையை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளையான்குடி பகுதிகளில் சனிக்கிழமை இளையான்குடி, ஞாயிற்றுக்கிழமை சாலைக்கிராமம், வெள்ளிக்கிழமை சூரானம், புதன் கிழமை கலங்காதான்கோட்டை ஆகிய இடங்களில் வாரச் சந்தை கூடுகிறது. இந்த சந்தைகளில் பழக்கடைகளிலும், தள்ளுவண்டி, பிளாட்பாரங்களிலும், சாலையோரங்களிலும் மாம்பழங்கள் விற்கப்படுகிறது. மாம்பழம் சீசன் ஆரம்பம் என்பதால், மாம்பழங்களும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. வாரச்சந்தைகளில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.30 முதல் ரூ.60 வரை பல வகையான மாம்பழங்கள் விற்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் கார்பைட் கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கெமிக்கல் வாடை வீசும் மாம்பழங்களை சாப்பிட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை இளையான்குடி பகுதிகளில் விற்கப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகளோ, சுகாதாரத்துறையினரோ ஆய்வு செய்யவில்லை. அதனால் மொத்த வியாபாரிகள் கார்பைட் கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகளவில் விற்பனை செய்கின்றனர் என பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. இளையான்குடி பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கார்பைட் கல்லால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Carbide mango sales market ,
× RELATED கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு