×

பாடாலூர் பகுதி கடை, வீடுகளில் நூதன முறையில் பணம் எடுத்து சென்ற மர்மநபர் அச்சத்தில் வணிகர்கள், பொதுமக்கள்

பாடாலூர்,ஏப். 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் நூதன முறையில் மர்மநபர் மோசடியில் ஈடுபட்டதால் பொதுமக்களும், வணிகர்களும் அச்சத்தில் உள்ளனர். ஆலத்தூர் தாலுகா பாடலூர் ரைஸ்மில் தெருவில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்ற மர்ம நபர் தங்கள் வீட்டில் விசேஷம் வைத்து இருப்பதாகவும், மளிகை பொருட்கள் வேண்டும் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மளிகை பொருட்கள் வேண்டும் எனக்கூறி ஆர்டர் கொடுத்தார். கடை உரிமையாளர் பொருட்களை கடையில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கடையின் கல்லாவில் இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, மளிகைப் பொருள்களை பார்சல் செய்து  எடுத்து வையுங்கள் ஆட்டோ எடுத்து  வந்து வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டு நைசாக நழுவினார்.  பின்னர் அங்கிருந்து சென்ற மர்ம நபர் கடைவீதியில் உள்ள ஒரு  மளிகை கடைக்கு சென்று அங்கும் அதேபோல் மளிகை பொருட்களை   ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் கல்லாவில் வைத்திருந்த ரூ.4,000  ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்களை   கொண்டு செல்ல ஆட்டோ எடுத்து  வருகிறேன் எனக்கூறி நைசாக நழுவி சென்று விட்டான். பின்னர் இந்திரா நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த ரமேஷ்  வீட்டுக்கு சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த மனைவி மஞ்சுளாவிடம்  சிமெண்டு மூட்டை வந்துள்ளது.   அதற்காக உங்கள் கணவர் ரூ.4 ஆயிரம் பணம் வாங்கிக்க சொன்னார் என்று சொல்லி பணத்தை பெற்றுக் கொண்டு நழுவிச் சென்றான். அதனையடுத்து  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மசூதிக்கு சென்ற மர்ம நபர் அங்கு  இருந்தவரிடம்   ரூ.2000  பணம் கொடுத்து சிறப்பு  தொழுகை நடத்துங்கள் என்று கூறிவிட்டு நைசாக பேசி அங்கு அவர்  வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு நைசாக நழுவி தான் வந்த பைக்கில் சென்று விட்டான்.

அதே பகுதியில் உள்ள ரத்தினம்பிள்ளை என்பவர் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம்  உங்கள் வீட்டுக்காரர் எனது நண்பர்   என அறிமுகப்படுத்தி கொண்டு தான்   வெளிநாட்டில் இருந்து  வந்து உள்ளதாக கூறி  குடிக்க தண்ணீர் வேண்டும் எனக்கூறியுள்ளார் அப்போது அவர் தண்ணீர் எடுக்க சென்ற போது  வீட்டில் செல்பில் வைத்திருந்த 3/4 பவுன் மதிப்புடைய   2 மோதிரத்தை  எடுத்துக் கொண்டு சென்று விட்டான். இதுகுறித்து ரத்தினம்பிள்ளை பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்  இதுபோல் பாடாலூர் பகுதியில் 2 நாள்களில் பல இடங்களில் ஒரு மர்ம நபர்  நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டதால் பாடாலூர்   பகுதி வணிகர்களும்  பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடாலூர் அருகே உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தில் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வணிகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களால் பாடாலூர் பகுதியில் கடைகள் வீடுகளுக்கு அறிமுகம் இல்லாத யாராவது வந்தால் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Traders ,civilians ,house ,area ,Pathaloor ,
× RELATED கோயம்பேடு சந்தையை தூய்மைப்படுத்தும்...