×

நகராட்சி கழிப்பறை கழிவுகள் பாதாள சாக்கடையில் இணைப்பு

விருதுநகர், மார்ச் 22: விருதுநகர் பழைய பஸ் நிலைய கழிப்பறை கழிவுகள் திறந்தவெளி கால்வாயில் விடப்பட்ட நிலையில், தினகரன் செய்தியை தொடர்ந்து பாதாளச்சாக்கடையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நம்ம டாய்லெட் கழிவுகள் திறந்த வெளி வாறுகாலில் விடப்பட்டு வந்தது. கடந்த பிப்.9ம் தேதி விருதுநகர் வந்த தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹர்மாணி பழைய பஸ் நிலையத்தில் நடத்திய ஆய்வின் போது கழிப்பறை கழிவுகளை திறந்த வெளி வாறுகாலில் விடப்படுவதை கண்டு உடன் பாதாளச்சாக்கடையில் இணைக்க உத்தரவிட்டார்.  ஆனால் நகராட்சி நிர்வாகம் 38 நாட்களாக இணைப்பு வழங்காமல் இருந்தது. இதனால் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் மூக்கினை பொத்தி வந்து செல்லும் அவலம் தொடர்ந்தது.
இது பற்றிய செய்தி மார்ச் 18ல் தினகரனில் செய்தி வெளிவந்தது. அதை தொடர்ந்து நகராட்சி  நிர்வாகம் திறந்த வெளி வாறுகாலில் விடப்பட்ட கழிவுகளை பாதாளச்சாக்கடை குழாயில் இணைத்துள்ளது. இதை தொடர்ந்து பழைய பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் நிம்மதி மூச்சு விடும் நிலை உருவாகி உள்ளது.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை