×

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை அறந்தாங்கி எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதா பேனரை அகற்றவில்லை அதிகாரிகள் அலட்சியம்

அறந்தாங்கி, மார்ச் 22: அறந்தாங்கியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பேனர் அகற்றப்படாமல் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்து விடுகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த  உடன் ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் வருவாய்த்துறையினரால் பூட்டி  சீல் வைக்கப்படும். அதேப்போல கட்சி தலைவர்களின் உருவச் சிலைகளும், கொடிக்கம்பங்களும் துணியால் மறைக்கப்படும். அரசியல் கட்சிகள் சுவர்களில் எழுதியுள்ள விளம்பரங்களும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக ரத்தினசபாபதி உள்ளார். அவர் அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவ  பிளக்ஸ் பேனரை அலுவலக வெளிப்புற கதவின் இருபுறமும் வைத்திருந்தார். அதேபோல அலுவலகத்தின் உள்ளேயும் ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததும் எம்எல்ஏ அலுவலகம் வருவாய்த்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் அறந்தாங்கி எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டாலும், அலுவலகத்தின் வெளியே கதவு அருகே  வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு  உருவ பிளக்ஸ் பேனர்களை வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. துணியால் கூட மூடாமல் வைத்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும். இந்த பேனரை உடனே அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : MLA Office ,
× RELATED ஜெயங்கொண்டம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல் வைப்பு