×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளின் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் ஆய்வு

திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் நேற்று முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். மக்களவைத் தேர்தலில் விதிமீறல்களை கண்காணிக்கவும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு கணக்குகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரண்டு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளராக பத்மராம் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதிக்கான செலவு கணக்கு பார்வையாளர்களாக சி.எஸ்.போஜி, ரகுவன்ஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதிக்கு மற்றொரு பார்வையாளர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் நேற்று பொறுப்பேற்ற தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், வேட்பாளரின் வரவு செலவு கணக்குகளை பராமரிப்பது, வேட்பாளர் புதிய வங்கி கணக்கு தொடங்குவது, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை சேகரிப்பது குறித்து, வரவு செலவு கணக்கு குழு அலுவலர்களுக்கு பார்வையாளர்கள் ஆலோசனை வழங்கினர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால், வேட்பாளர்களின் வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க, ஒவ்வொரு தொகுதிக்கும் கணக்கு தணிக்கை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தங்களுடைய செலவு விபரங்களை தினமும் அறிக்கையாக அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் ரகுவன்ஸ்குமார், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, ஊடக கண்காணிப்பு மையம்(மீடியா சென்டர்) ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். அப்போது, உதவி கலெக்டர்(பயிற்சி) பிரதாப், தேர்தல் பிரிவு அதிகாரிகள் முருகன், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : examination ,Arani ,Thiruvannamalai ,
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை