×

குமாரபாளையம் அரசுப்பள்ளியில் தேர்வு எழுத சென்ற மாணவர்களை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்

குமாரபாளையம், மார்ச் 20: குமாரபாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதச்சென்ற மாணவர்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நடப்பாண்டு முதல் மதிய நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர். மதியம் 1.45 மணியளவில் தேர்வுக்கான மணியடித்தவுடன், மரத்தடியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லத்துவங்கினர். அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த வெறிநாய் ஒன்று மாணவர்களை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. இதில், வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் தினாவை வெறிநாய் கடித்துவிட்டு அங்குமிங்கும் ஓடியது. இதனால் மாணவ, மாணவிகள் அலறியடித்தபடி வகுப்பறைக்குள் புகுந்தனர். தொடர்ந்து, நாய்கடிக்கு ஆளான மாணவர் தினாவை அங்குள்ள ஆசிரியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு கொண்டு வந்து தேர்வை எழுத வைத்தனர். தொடர்ந்து, மாலையில் தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் கூட்டமாக பள்ளியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆனங்கூர் பிரிவு சாலை அருகே சிறு சந்திலிருந்து ஓடிவந்த அதே வெறிநாய் மாணவர்களை கண்டதும் துரத்த தொடங்கியது. இதனைக்கண்டு மாணவர்கள் அங்கிருந்த கடைக்குள் தஞ்சமடைந்தனர். இதனால், அந்த பகுதி பரபரப்படைந்தது. நேற்று முன்தினம் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை வெறிநாய் கடித்துள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். வெறிநாய் சம்பவம் குறித்து வந்த புகாரின்பேரில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாயை கண்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள், விரட்டி பிடித்து கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்தனர். பின்னர், நகராட்சி நாய் அறுவை சிகிச்சை அறையில் வெறிநாய் கட்டி வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

Tags : government school ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...