×

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இன்று வாபஸ் பெற வாய்ப்பு

ராஜபாளையம். மார்ச் 19:  சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராஜபாளையம் அருகே, சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி, 5வது நாளாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமை வகித்தனர். இதில், மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ‘சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் மற்றும் அய்யனாபுரம் பகுதியை தவிர மற்ற இடங்களில் தறிகள் இயங்குகின்றன. நியாயமான முறையில் போராட்டம் நடக்கவில்லை என மாஸ்டர் வீவர் எனப்படும் சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையில், ‘2016 ஒப்பந்த காலம் முடிவுக்கு வரும் முன்னதாக வேலைநிறுத்தம் தொடங்கியதாக உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு, ‘ஒப்பந்தப்படி 3ம் ஆண்டு கூலி உயர்வு முழுமையாக வழங்கவில்லை. இதனால், முன்னதாக வேலை நிறுத்தத்தை தொடங்கினோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் 2016 ஒப்பந்தப்படி 3ம் ஆண்டுக்கான கூலி தரமறுக்கும் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார், டி.எஸ்.பி உறுதி அளித்தனர். மேலும், போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அறிவுறுத்தினர். அடுத்த 3 ஆண்டுகான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடுவதற்கு, ஏப்.23ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சங்கரபாண்டியபுரத்தில் இன்று காலை நடக்க உள்ள தொழிலாளர் மகாசபை கூட்டத்தில் பேச்சுவார்த்தையின் முடிவு தெரிவிக்கப்பட்டு, அதன்பின்னர் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Lecturers ,
× RELATED அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...