×

நீர்வரத்துக் கால்வாய் தூர்ந்து கிடப்பதால் வறண்டு கிடக்கும் ஆனைக்குளம் கண்மாய்

திருச்சுழி, மார்ச் 19: திருச்சுழி அருகே, நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாராமல் தூர்ந்து கிடப்பதால், ஆனைக்குளம் பெரிய கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதனால், விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி பஞ்சாலைக்கு வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருச்சுழி அருகே, ஆனைக்குளம் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் 15 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் விவசாயம் பொய்த்தது. மேலும், நீர்வரத்துக் கால்வாய்களில்  சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால், மழை காலங்களில் கண்மாய்க்கு சரியாக நீர் வருவதில்லை. குறைந்த அளவு தண்ணீரே வருகிறது. இதன் மூலம் விவசாயம் செய்யும் நிலை உள்ளது. திருச்சுழி அருகே, குண்டாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வரத்து கால்வாய் அருகே, மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணல் எடுக்கப்பட்டதால் வரத்துக் கால்வாய் முழுவதும் சேதமடைந்துள்ளது. பனையூரை அடுத்த, சோலார் பிளாண்ட் அருகே, போக்குவரத்துக்காக நீர்வரத்துக் கால்வாயை மேடாக்கியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்மாயில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘திருச்சுழி பகுதியில் பரவலாக மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்ந்து கிடப்பதால், ஆனைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, தூர்வர வேண்டும். நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வாரினால், ஆண்டு முழுவதும் கண்மாயில் நீர் நிறைந்திருக்கும். நம்பிக்கையுடன் விவசாயப் பணிகளை செய்யலாம். மழைக் காலங்களில் குண்டாற்றில் செல்லும் நீரை, நேரடி நீர்வரத்துக் கால்வாய் மூலம் திருப்பினால் கண்மாய் நிரம்பி விடும். கண்மாய் வறண்டு கிடப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் பஞ்சாலைக்கு வேலைக்கு செல்கிறோம். எனவே, நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, கண்மாயில் நீர்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : wells ,
× RELATED நெல்லியாளம் நகராட்சியில் பம்பு...