×

உள்நாட்டு வியாபாரிகள் பணம் கொடுக்க தாமதம் சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்கள் பாதிப்பு

திருப்பூர், பிப்.20: திருப்பூர் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களுக்கு உள்நாட்டு வியாபாரிகள் சரக்குக்கு உரிய தொகை மொத்தமாக வழங்காமல் பல்வேறு தவனைகளில் இழுபறிக்கு பின் கொடுப்பதால் முதலீட்டு செலவுகளுக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் செயல்படுகிறது.  இவர்கள் அனைவரும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு ஆடைகள் உற்பத்தி செய்து விற்பனைசெய்கின்றனர்.  மத்திய அரசு பணப்பரிவர்த்தனைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் தற்போது ஓரளவுக்கு சீரடைந்துள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி புதிதாக கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்கள் பல லட்சங்களை முதலீடு செய்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். நிட்டிங், சாயமிடுதல், பிரிண்டிங், பிளிச்சிங் உட்பட பல்வேறு வேலைகளுக்கு உடனுக்குடன் பணம் கொடுக்க வேண்டும். தங்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் கொடுக்கவேண்டும். கடை வாடகை, மின் கட்டணம் உட்பட பல்வேறு செலவினங்கள் உள்ளன. கோவை, ஈரோடு, சென்னை, மதுரை, பெங்கலூர், மும்பை, டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள மொத்த வியாபாரிகளுக்கு பனியன், டி. சர்ட், ஜட்டி, உட்பட பல்வேறு பொருட்களை ஆடரின் பேரில் கொடுக்கின்றனர்.    மத்திய அரசு கொண்டுவந்துள்ள பணப்பரிவர்த்தனைக்கு முன் வியாபாரிகள் எடுக்கும் பொருட்களுக்கு மொத்தமாக ஒரே தவணையாக பணம்கொடுத்து வந்தனர். இதனால், சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்களுக்கு பணத்தட்டுப்பாடு இன்றி தொழில் சீராக நடத்தி வந்தனர். தற்போது, பணப்பரிவர்த்தனைக்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதால் உள்நாட்டு வியாபாரிகள் சிறிது, சிறிதாக பல தவணைகளில் வங்கிகளில் பணம் செலுத்துகின்றனர். இதனால், பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  தொழிலாளர்களுக்கு முறையாக முழுமையான சம்பளம் கொடுக்க முடியாததால் பல ஆண்டுகளாக  வேலை பார்த்த தொழிலாளர்கள் பெரிய நிறுவனங்களுக்கு இடம்மாறுகின்றனர். வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்பவர்கள் அசலும், வட்டியும் சேர்ந்து கட்டுவதால் மூலதன செலவுக்கு பணம் இன்றி  நிறுவனங்களை மூடவேண்டிய அவல நிலையுள்ளது. இதனால், வழக்கமான பின்னலாடை உற்பத்தியில் சுணக்கம் ஏற்படுகிறது. திருப்பூரில் இயங்கி வரும் சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்களின் நிலையை உணர்ந்து மொத்த வியாபாரிகள் ஒரே தவனையில் பணம் கொடுக்கவேண்டும். தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் பில் இல்லாமல் அனுப்பும் 2ம் நெம்பர் தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து பொருட்களுக்கும் பில் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இது வரை பில் இல்லாமல் சரக்குகளை அனுப்பி வரியினங்களை ஏமாற்றிய சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் ஆகியோர் தற்போது, பில் முறைக்கு மாறியுள்ளனர். மொத்த வியாபாரிகள் சிறு, குறு பின்னலாடை உரிமையாளர்களுக்கு விரைவாக பணத்தை கொடுக்கவேண்டும்.  சிறு, குறு நிறுவனங்களுக்கு சரக்குக்கு உரிய பணத்தை மொத்தமாக வழங்க மத்திய அரசு வியாபாரிகளுக்கு பணம் பரிவர்த்தனையில் சலுகைகள் வழங்கவேண்டுமென விரும்புகின்றனர்.

Tags : merchants ,owners ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...