துணை நடிகை தற்கொலை இல்லை காதலனே கொலை செய்துள்ளார்: போலீசில் தாய் பரபரப்பு புகார்

சென்னை: ‘‘என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, காதலன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்,’’ என துணை நடிகையின் தாய், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று  அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த எஸ்தர் பியூலா ராணி (42) போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கு, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் யாஷிகா சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில் சென்னை ஜிகேஎம் காலனியை சேர்ந்த மோகன்பாபு (எ) அரவிந்த் என்பவருக்கும், மகளுக்கும் காதல் ஏற்பட்டு  அவர்கள் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 12ம் தேதி என் மகள் யாஷிகா எனக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பி இருந்தார். அதை பார்த்து நான் உடனே மகளை தொடர்பு கொண்டேன். ஆனால் அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் அதே இடத்தில் வசிக்கும் அஜித் என்பவருக்கு போன் செய்தேன். அவன் பார்த்து விட்டு உங்கள் மகள் தூக்கிட்டு இறந்துவிட்டார் என்று கூறினார். நான் சென்னை வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், என்  மகள் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்தனர். அப்போது, நான் என் மகளை புதைக்க சொன்னேன். ஆனால் மோகன் பாபு நண்பர் அஜித் எரிக்கலாம் என்று கூறினார். அதற்கு நான்  என் மகள் சாவில் மர்மம்  உள்ளது, இதனால் எரிக்க கூடாது என்றேன். பின்னர் மயானத்திற்கு வந்த பிறகு என் மகள் உடலை எரித்து விட்டனர். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் உடைந்து அலங்கோலமாக இருந்தது. என் மகள் வைத்திருந்த 50 சவரன் நகை மற்றும்  பணம் எதுவும் இல்லை. நகை, பணத்துக்காக மோகன்பாபு மற்றும் அஜித் ஆகியோர் தான் என் மகளை கொலை செய்துள்ளதாக எனக்கு சந்தேகம் வந்துள்ளது.

என் மகள் 3 மாதம் கர்ப்பமாகி, இறப்பதற்கு முன் கர்ப்பம் கலைந்து இருப்பதற்கான ஆதாரம் வீட்டில் இருந்தது. இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் என் புகாரை போலீசார் ஏற்கவில்லை.எனவே, என் மகளை கொலை ெசய்து தடயங்களை அழித்த மோகன் பாபு அவரது நண்பர் அஜித் அதற்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

× RELATED முத்துப்பேட்டையில் மனைவியுடன் தகராறு: கணவன் தற்கொலை