ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார் வயரை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது

பாடாலூர், பிப்.15:  ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே  ஊராட்சி கிணற்றில் மின்மோட்டார் ஒயரை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி ஊராட்சிக்கு சொந்தமான  பொதுக் கிணறு வெள்ளக்கரை ஓடையில் உள்ளது.  இந்த கிணற்றில் கிராம ஊராட்சி  சார்பில் மின் மோட்டார் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் மின் இணைப்பிற்கு காப்பர் கம்பியால் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்மோட்டாருக்கான இணைப்பு மின்சார ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்நிலையில் பாடாலூர் அடுத்த நெடுங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் காப்பர் கம்பி விற்பனை செய்ய இருவர் வந்து உள்ளதாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் நத்தக்காடு கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் நடராஜன்  (27), மதியழகன் மகன் பிரதீப் (28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

× RELATED கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குடிநீருக்கு தவிக்கும் மக்கள்