×

பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத் தொகை பெற ஒரே நேரத்தில் சிட்டா எடுக்க படையெடுப்பு மின்னணு சேவை முடக்கம்: விவசாயிகள் கடும் அவதி

அறந்தாங்கி,  பிப்.15: பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெற தமிழகம் முழுவதும் தமிழக  அரசின் நிலப்பதிவேடு மின்னணு சேவை இணைய பக்கத்தில் சிட்டா எடுக்க  விவசாயிகள் முயன்றதால் அப்பக்கம் முடங்கியதால் விவசாயிகள் சிட்டா நகல்  எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.மத்திய அரசு சிறு, குறு  விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கவுரக ஊக்கத் தொகை என்ற பெயரில்  ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங் கப்படும் என அறிவித்தது.  அதன்படி நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், ச விவசாயிகள் சான்று,  சிட்டாநகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அந்தந்த  பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி  நிலம் உள்ள விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளித்து  வருகின்றனர். அவர்கள் மனுவுடன் புதிதாக எடுக்கப்பட்ட சிட்டா நகலை இணைக்க  வேண்டி உள்ளது. ஆனால் சிட்டா நகல் எடுக்கக்கூடிய தமிழக அரசின் இணைய பக்கமான  நிலப்பதிவேடு மின்னணு சேவை இணையப்பக்கம் நேற்று முடங்கியது. இதனால்  விவசாயிகள் சிட்டா நகல் எடுக்க முடியாமல் கடை, கடையாக ஏறி இறங்கினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மத்திய  அரசு அறிவித்த விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான  காலக்கெடு இன்றுடன் (வெள்ளி) முடிவடைவதாக கூறுகின்றனர். அதனால்  தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கணினி சிட்டா எடுக்க  முயன்றதால், தமிழக அரசின் நிலப்பதிவேடு மின்னணு சேவை இணைய பக்கம்  முடங்கியுள்ளது. இதனால் நாங்கள் கணினி சிட்டா எடுக்க முடியாததால், கிராம  நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே  தமிழக அரசின் நிலப்பதிவேடு மின்னணு சேவை இணைய பக்கத்தை உடனடியாக  சீரமைக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும்  திட்டத்திற்கான மனு பெறக்கூடிய காலக்கெடுவையும் அரசு நீட்டிக்க வேண்டும் என்றனர்.

மனு கொடுக்க முடியாமல் தவிப்பு
மத்திய அரசு அறிவித்த திட்டத்திற்கு கணினி சிட்டா எடுக்க முடியாத அளவிற்கு கடந்த 2நாட்களாக தமிழக அரசின்  நிலப்பதிவேடு மின்னணு சேவை இணைய பக்கம் முடங்கியுள்ளதால், விவசாயிகள் மனு  கொடுக்க முடியாமல் அவதிக்கு ள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு விவசாயிகள்  தடையில்லாமல் சிட்டா எடுக்க இணையப்பக்கத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sidha ,
× RELATED விவாதங்களை ஏற்படுத்தும் சித்தா: சித்தார்த் நம்பிக்கை