×

மாணவிகளுக்கு பட்டமளிப்பு நாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு

நாமக்கல், பிப்.15:  நாமக்கல் மாவட்டத்தில், 114 சஸ்பெண்ட் ஆசிரியர்கள் நிபந்தனையுடன் மீண்டும் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வேறு பள்ளிக்கு அளிக்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை வாங்காத இடைநிலை ஆசிரியர்கள், இறுதி வரை போராடி மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்ந்து விட்டனர்.  நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 114 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முழு ஆண்டு தேர்வு நெருங்கி வருவதால், இவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 114 ஆசிரியர்களும், மீண்டும் பணியில் சேர்வதற்கான உத்தரவுகளை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வழங்கினார். அப்போது, அந்த ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவு, விளக்க நோட்டீஸ் ஆகியவையும் சேர்த்து வழங்கப்பட்டது. இவற்றை பெற்றுக்கொண்ட தலைமையாசிரியர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து நேற்று மாலை உத்தரவுகளை வழங்கினர். இதையடுத்து, அனைவரும் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேர்ந்தனர். இதற்கிடையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 19 இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த வாரம் மாவட்ட கல்வி அலுவலர்கள் வேறு பள்ளிக்கு இடமாறுதல் அளித்து உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இந்த உத்தரவை அவர்கள் பெறவில்லை. ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில்தான் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறி வந்தனர்.இந்நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், 19 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மீண்டும் அதே அதே பள்ளியில் பணியாற்ற உத்தரவு மாற்றி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களும் ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளியில் பணியில் சேர்ந்து கொண்டனர். 114 ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான், 114 பேரும் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : teachers ,Namakkal district ,school ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை