×

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் வறுமைக்கோடு பட்டியலில் பிரபல டாக்டர்கள் பெயர்

நாகர்கோவில், பிப். 15:  நாகர்கோவில் நகராட்சி பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் பிரபல டாக்டர்களின் பெயர்கள், முன்னாள் எம்எல்ஏவின் பெயர் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர், தெருவோர வியாபாரிகள் குடும்பத்திற்கு ₹2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 60 லட்சம் குடும்பதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். இந்நிலையில் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்கள் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.    குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறை இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. நாகர்கோவில் நகராட்சியில் 2003ம் வருடம் கணக்கெடுப்பின் படி மொத்தம் 11 ஆயிரத்து 122 குடும்பதாரர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களது விவரங்களை சேகரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.  டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பணியாளர்களை கொண்டு விவரங்கள் சேகரிக்கும் பணி நடக்கிறது.

   300 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேராக சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர். வறுமைக்கோடு பட்டியலில் நாகர்கோவிலில் உள்ள 2 பிரபல மருத்துவமனை டாக்டர்களின் பெயர்கள் உள்ளன. மேலும் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பெயரும் உள்ளது. சில முன்னாள் கவுன்சிலர்களின் பெயரும் இந்த வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் பல வசதிபடைத்தவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.ஆனால் தகுதியான பல ஏழைகளின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அரசின் உதவிகள் பல ஏழைகளுக்கு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சில சலுகைகளை வசதிப்படைத்தவர்கள் பெற்று வருகின்றனர்.  தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ₹2 ஆயிரம் உதவித்தொகை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள  சில ஏழைகளுக்கு கிடைக்காமல் போகும். இதனால் அதிகாரிகள் ஏழைகளின் பட்டியலை தயார் செய்து அவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுய உதவிக்குழுக்கள் உதவியுடன் கணக்கெடுப்பு
குமரி மாவட்டத்தில்  லீபுரம் முதல் தூத்தூர் கடற்கரை பகுதிகள் வரை உள்ள பயனாளிகளுக்கு ₹2 ஆயிரம் வழங்க வேண்டி நேற்று சுய உதவிக்குழுக்கள் மூலமாக கணக்கெடுப்பு தொடங்கியது.இது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து பெறுகின்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 32 ஆயிரம் குடும்பங்களில் இந்த விபர சேகரிப்பு நடக்கிறது. இந்த சர்வே முறையாக நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளை கொண்டு நடத்தாமல் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தி நடத்துகின்ற இந்த சர்வே குழப்பத்தை ஏற்படுத்தும்விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : doctors ,area ,Nagercoil ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...