×

மதகுகள் அமைக்காததால் சுண்டுக்குழி ஏரியில் வீணாக வழிந்தோடும் தண்ணீர்

குறிஞ்சிப்பாடி, பிப். 15: வடலூர் பார்வதிபுரத்தில் அமைந்துள்ள சுண்டுக்குழி ஏரியில் மதகுகள் அமைக்க வேண்டும், என்எல்சி கசடு மணல் படிந்து மீண்டும் தூர்ந்து போவதை தடுக்க நீரை வடிகட்டி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் வருவாய் கிராமத்தில் சுண்டுக்குழி ஏரி அமைந்துள்ளது. சுமார் 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் பார்வதிபுரம், நைனார்குப்பம், வெளிமருதூர் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இப்பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. இதனை தூர்வாரி ஆழப்படுத்தி, மதகுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வடலூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சுண்டுக்குழி ஏரி, காரப்பா ஏரி மற்றும் வெங்களத்து ஏரி ஆகிய ஏரிகளை தூர்வார என்.எல்.சி. இந்தியா நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் பார்வதிபுரத்தில் உள்ள சுண்டுக்குழி ஏரியை ரூ.52 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணி முடிந்துவிட்டது. ஆனால் ஏரியில் மதகுகள் அமைக்கவில்லை. ஏரியில் தேங்கும் தண்ணீர் மதகு வசதி இல்லாததால், கடந்த ஆண்டு பருவமழை காலங்களில் பெய்த மழைநீர் மற்றும் என்.எல்.சி., சுரங்கம் வெளியேற்றும் நீர் ஆகியவை ஏரியில் தேங்காமல் வீணாக வழிந்தோடியது. இதனால் பாசன விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க ஏரியில் 3 மதகுகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏரி தூர்வாரும் பணி முழுமை பெறவில்லை என்றும், ஏரியின் நீர்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

என்எல்சி சுரங்கத்தில் இருந்து வரும் தண்ணீரில் வண்டல் மண் கலந்து ஏரியில் படிவதால், தூர்வாரப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் ஏரி மீண்டும் தூர்ந்து வருகிறது. இதனால் கால்நடைகள் தண்ணீர் பருக ஏரியில் சென்று, சிக்கிக் கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனை தடுக்க ஏரிக்கு முன்னதாக குட்டைகள் அமைத்து என்எல்சி சுரங்க நீரை அதில் தேக்கி, வண்டல் மணலை வடிந்த பின்னர் நீரை ஏரியில் தேக்க வேண்டும்.தற்போது மழை இல்லாத சூழலை பயன்படுத்தி ஏரியில் மதகுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cungeon ,lake ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!