×

முறையான தகவல் தெரிவிக்காமல் உலகத்திறனாய்வு விளையாட்டு போட்டி

சிவகங்கை, பிப்.14: சிவகங்கை மாவட்டத்தில் உலகத்திறன் மிக்க விளையாட்டு வீரர்களை கண்டறியும் பொருட்டு ஆறு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகள போட்டிகள் நடந்தன. பிப்.12ல் தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும், பிப்.13ல் சிவகங்கை கல்வி மாவட்ட மாணவர்களுக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கிலும், போட்டிகள் நடந்தன. 100மீ, 200மீ, 400மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகள் இதில் இடம் பெற்றன.இந்நிலையில் இந்த போட்டிகள் நடைபெறவது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வில்லை.இதனால் போட்டிகள் நடைபெறுவதே பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. இதனால் மிகக்குறைவான எண்ணிக்கையிலான பள்ளிகள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்றுள்ளன.

ஆசிரியர்கள் கூறியதாவது: போட்டிக்கான சரியான தகவல் சுற்றறிக்கை மூலம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் பத்திரிக்கை செய்தியை மட்டுமே வைத்து போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு மாணவர் இரண்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என விதிமுறை இருந்தது. ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்களிப்பு செய்ய தயார் படுத்தியிருப்போம். ஆனால் ஒரு போட்டியில் தான் பங்கேற்க வேண்டும் என போட்டி நடைபெறும் நாளுக்கு முதல் நாள் தெரிவிக்கின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதுபோல் முன்பு ஆண்களுக்கு 800 மீ, பெண்களுக்கு 600 மீ ஓட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டும் தற்போதும் ஆண் மற்றும் பெண்கள் இருவருக்குமே 400மீ ஓட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. சரியான தகவல் இல்லாமல் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதனால் அப்பள்ளி மாணவர் மட்டுமே அதிகப்படியான போட்டியில் வெற்றி பெற்றது போல் தோற்றத்தை உருவாக்குகின்றனர். அரசு அதிகாரிகளே இதுபோல் செய்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

Tags : Competitive Sports Competition Competition ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்