×

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் 17ம் தேதி தமிழக முதல்வர், துணை முதல்வர் வருகை எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு

திருவண்ணாமலை, பிப்.13: அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு மற்றும் முன்னாள் அமைச்சர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வரும் 17ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகின்றனர். அதையொட்டி, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பைபாஸ் சாலையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வரும் 17ம் தேதி மாலை நடக்கிறது. விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, சிலைகளை திறந்து வைக்கின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளனர். அதையொட்டி, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கே.அருள்நேசன், ஜி.துர்காதேவி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் அமைந்துள்ளள அரவிந்தர் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், வரும் 17ம் தேதி மாலை நடக்கிறது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர். ஆரணியில் நடைபெறும் சிலை திறப்பு விழா மற்றும் கலசபாக்கத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்ஏல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Chief Minister ,Deputy Chief Minister ,visit ,Tamil Nadu ,opening ,Tiruvannamalai district ,Jayalalithaa ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு