×

வருவாய் பிரிவு ஊழியர்கள் பற்றாக்குறை மாநகராட்சி வரி வசூலிப்பில் சுணக்கம்

மதுரை, ஜன.23: வருவாய் பிரிவு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் பற்றாக்குறை நிலையிலேயே வைத்துக்கொண்டு வரி வசூலிப்பதில் மாநகராட்சி சுணக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி கடைகள் வாடகை, குத்தகை வரி, கழிப்பறைகள் வாடகை, மார்க்கெட் வரி, ஆடுவதை கூட வாடகை முதலியவற்றை மாநகராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் வருவாய் பிரிவு வசூலிக்கிறது. தற்போது மண்டல அலுவலகங்கள் மட்டுமின்றி மாநகராட்சி மைய அலுவலகத்திலும் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் வேறு பிரிவு ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி வரி வசூல் செய்கின்றனர். முன்பு வருவாய் பிரிவில் வரி வசூலிப்பவர்கள் 7 பேர், களப்பணியாளர்கள் 15 பேர் பணிபுரிந்து வந்தனர். பலரும் ‘வருமானம் ஈட்டும்’ வேறு வேலைகளுக்கு கேட்டு சென்று விட்டனர். தற்போது களப்பணியாளர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்து வரிவசூல் செய்வதில் பெரும் தலைவலியாக இருக்கிறது என ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘‘கடந்த 1.8.2016க்கு பிறகு கடைகளின் வாடகை பல மடங்கு உயர்ந்துவிட்டது. பெரும் தொகையை கொடுத்து கடைகளை ஏலம் எடுத்து நடத்துகின்றனர். காந்திமியூசியம் எதிரில் உள்ள ராஜாஜி சிறுவர் பூங்கா ரூ.1 கோடி தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. யானை பலத்துடன் இருக்கின்றனர். இவர்களிடம் முகத்தை சுளித்துக்கொண்டு கடை வாடகை வசூலிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் மாதவாடகை தராமல் இழுத்தடிக்கின்றனர். இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. இதையும் மீறி வரி வசூலிக்காவிட்டால் நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இவற்றை தீர்க்கவும் உயர் அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. நாங்களாக கிடந்து உருளவேண்டியிருக்கிறது. மேலும் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க உயர் அதிகாரிகள் தயங்குவது ஏன் என தெரியவில்லை’’ என்றனர்.

Tags : revenue department staff ,
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்