×

பொள்ளாச்சி- கோவை அகல பாதையில் ரயில் சேவை துவங்கி ஒரு ஆண்டு நிறைவு

பொள்ளாச்சி, ஜன. 23:   திண்டுக்கல்லில் இருந்து போத்தனூர் வரையிலான அகல ரயில்பாதை திட்டமானது, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. அப்போது பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு ரயில் சோதனையோட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதியன்று காலை, மாலை என இரண்டு நேரம் பயணிகள் ரயில் சேவை துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பயணித்தனர். கோவைக்கு பல்வேறு பணி நிமித்தமாக சென்றுவரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. பொள்ளாச்சி - கோவை இடையே உள்ள அகல பாதையில் ரயில் சேவை துவங்கி நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் வகையில், ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று காலையில், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கூறுகையில், ‘பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் தொடர்ந்து விரிவாக்க பணி மற்றும்  ஆங்காங்கே புதிய பாலம் கட்டும் பணி நடப்பதால் பயண நேரம்  அதிகமாகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ்சில் பயணம் செய்த சுமார் 40 சதவீதம்பேர், ரயிலில் பயணிக்கின்றனர்.  தற்போது கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் ரயிலில் 8 இணைப்பு பெட்டிகள் மட்டுமே உள்ளது.  இதனால் ரயிலில் இருக்கை கிடைக்காமல் பயணிகள் பலரும் நின்றபடியே பயணம் செய்கின்றனர்.
எனவே, பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டி இணைத்து பயணிகளின் சிரமத்தை போக்க  ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி- கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை நிரந்தரமாக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Pollachi-Coimbatore ,anniversary ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!