×

விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து 100 சதவீத பயிர் இழப்பீடு வழங்க வேண்டும்

சிவகங்கை, ஜன.22: சிவகங்கை மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கு 100 சதவீத பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  கடந்த 6 ஆண்டுகளாக போதிய மழையின்மை, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்ட வற்றால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பயிர் இன்சூரன்ஸ் செய்த 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளில் 54ஆயிரத்து 136 விவசாயிகளுக்கு ரூ.34.50கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டிற்கு சுமார் 80ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீடு செய்திருந்த நிலையில் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2014ம் ஆண்டிற்கு இன்சூரன்ஸ் இழப்பீடு இல்லை என அறிவிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் நெல் விவசாயம் சுமார் 62ஆயிரம் எக்டேர் நிலத்தில் செய்யப்பட்டது. அனைத்து பகுதிகளுமே வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 4 பிர்க்காக்களுக்கு மட்டுமே இழப்பீடு அறிவித்து அதிர்ச்சியளித்தனர். 2016ம் ஆண்டு காப்பீடு செய்த 84ஆயிரத்து 229விவசாயிகளில் 71ஆயிரத்து 270விவசாயிகளுக்கு ரூ.250.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2017-2018ம் ஆண்டில் 72 ஆயிரத்து 153 எக்டேர் நெற்பயிர் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின.

கடந்த 2017ம் ஆண்டில் 93 ஆயிரத்து 662 விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். இதில் முதற்கட்டமாக 71 ஆயிரத்து 407 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக்குறைவாக 10 சதவீதம், 14 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இன்றி அவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
 
அவர்கள் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் 100 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளுக்கு மிகக்குறைவாக இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் பாதிப்படைந்துள்ளோம். தேவையெனில் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து அனைத்து பகுதிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் பாதிப்படையும் வகையில் இருக்கும் இன்சூரன்ஸ் கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும் என்றனர்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...