×

அம்பிளிக்கை வடக்கு தெருவில் சாக்கடைக்குள் குடிநீர் குழாய் அமைத்த ஊராட்சி நிர்வாகம் தொற்று நோய்களால் துவழும் பொதுமக்கள்

ஒட்டன்சத்திரம், ஜன.22திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை ஊராட்சியில் தெருவில் ஓடும் சாக்கடைக்குள் குடிநீர் குழாய் அமைத்ததால் பொதுமக்கள் சாக்கடை நீரை குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட அம்பிளிக்கை ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். அம்பிளிக்கை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் தனியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையால் குழாய் இணைப்புகள் அனைத்தையும் துண்டிக்கப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட பொதுக்குழாய்கள் அமைக்கப்பட்டு, வாரம் இருமுறை தண்ணீர் திறக்கப்பட்டு, குடிநீர் தேவைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்கள் அனைத்தும் தெரு சாக்கடையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடங்களை சாக்கடைக்குள் வைத்து குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது.மேலும் குடிநீர் பிடிக்கும் வேளைகளில் சாக்கடையிலிருந்து வரும் கழிவுநீரும் குடிநீருக்குள் கலந்து புழுக்களுடன் வருகிறது. இந்த நீரை பிடித்துதான் பொதுமக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

இது குறித்து அவ்வூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கூறியதாவது, இந்த குழாய்கள் அமைக்கப்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அமைக்கப்பட்ட நாளிலிருந்தே குடிநீர் பிடிப்பதில் சிரமம் தான். இதனால் ஏற்படும் வியாதிகள் குறித்து ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இக்குழாய்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் மாற்றித்தருமாறும், தினமும் எங்களுக்கு பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

Tags : Panchayat administration ,North ,
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...