×

மாநிலம் முழுவதும் நட்டாற்றில் விடப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள்

வேலூர், ஜன.22: தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை அரசு கண்டுகொள்ளாமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். அரசுப்பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்கல்வி, தோட்டக்கலை, இசை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உட்பட்ட பாடங்களை 6 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு 16 ஆயிரத்து 550 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ₹5 ஆயிரம் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இவர்கள் வாரத்துக்கு மூன்று அரை நாட்கள் என மாதம் 12 அரை நாட்கள் பணி நேரம் நியமிக்கப்பட்டது.

இவர்களில் ஓய்வு வயதை எட்டிப்பிடித்தவர்கள், விபத்து, நோய், இயற்கை மரணம், வேறு பணிகளுக்கு சென்றவர்கள் என பல்வேறு காரணங்களால் 4 ஆயிரம் பணியிடங்கள் வரை தற்போது காலியாகி உள்ளன. தற்போது வெறும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று அரசும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ₹2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. தற்போது அவர்களுக்கு ₹700 உயர்த்தப்பட்டு மொத்தம் ₹7 ஆயிரத்து 700ஐ ஊதியமாக பெற்று வருகின்றனர். அதோடு இவர்களுக்கு பி.எப்., இஎஸ்ஐ என்ற பாதுகாப்பு பலன்களும் இல்லை. இதுதவிர அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் உட்பட இதர சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

தங்களுக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணிநிரந்தரமும், ஊதிய உயர்வும், கல்வித்தகுதிகேற்ற பணியிடங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர். ஆனால், சிறப்பாசிரியர்கள் தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தங்களை அரசு நட்டாற்றில் விட்டுள்ளது என்று சிறப்பாசிரியர்கள் மத்தியில் வேதனை குரல்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அரசுப்பள்ளி சிறப்பாசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘எங்களை நியமிக்கும்போதே படிப்படியாக உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். தற்போது நாங்கள் வாங்கும் ஊதியம் வெறும் ₹7,700தான். எந்த பணி பாதுகாப்பும் கிடையாது. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

Tags : teachers ,state ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...