×

வள்ளலார் பிறந்தநாளன்று இறைச்சி கடைகள் திறந்ததால் இந்து முன்னணியினர், சன்மார்க்க சங்கத்தினர்கள் சாலை மறியல்

செய்யாறு, ஜன.22: செய்யாறில் வள்ளலார் பிறந்தநாளன்று இறைச்சி கடைகள் திறந்திருந்ததால் இந்து முன்னணியினர் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வள்ளலார் பிறந்த நாளன்று மாமிச கடைகள் திறக்கக்கூடாது என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில செய்யாறில் நேற்று அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சன்மார்க்க சங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்திடம் வள்ளலார் பிறந்த நாளில் இறைச்சி கடைகள் மூடுவதற்கான மனு கொடுத்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் இறைச்சி கடை உரிமையார்களிடம் இதனை தெரிவிக்கவில்லையாம்.

இந்நிலையில் அனைத்து இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தை கண்ட இந்து முன்னணி மற்றும் சன்மார்க்க சங்கத்தினர் மார்க்கெட் அருகில் உள்ள வைத்தியர் தெரு சந்திப்பில் இறைச்சி கடைகளை மூட வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக செய்யாறு- வந்தவாசி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் இறைச்சி கடைகளை மூட ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து இறைச்சி கடைகள் மூடப்பட்டன.

Tags : Vallalar ,birthday ,meat shops ,
× RELATED வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு...