இலுப்பூர் அருகே சமையல் செய்தபோது காஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகன், மகள் படுகாயம்

இலுப்பூர், ஜன.18: இலுப்பூர் அருகே காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் தாய், மகன் மற்றும் மகள் உட்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலுப்பூர் அருகே தொட்டியபட்டியை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் கோயமுத்தூரில் பேக்கரி  கடையில்  வேலை பார்த்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி பொன்னுமணி (28), டெய்லர். இந்நிலையில் ெபான்னுமணி நேற்று மதியம் சமைப்பதற்காக வீட்டிலிருந்த காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது காஸ் சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டு எதிர்பாராமல் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. இதில் பொன்னுமணி, அருகிலிருந்த மகன் சஞ்சீவி(3) மற்றும் மகள் சங்கவி(2) ஆகியோர் தீயினால் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஓடுகள் அதிர்வில் சரிந்தன. படுகாயமடைந்த 3 பேரும் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு தீக்காயம் அதிகம் உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இலுப்பூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

× RELATED கறம்பக்குடி அருகே தாய், மகளை தாக்கிய கல்லூரி மாணவர் கைது