×

கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் நிர்வாக குழு உறுப்பினராக சேர 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கிறித்துவ மகளிர் உதவும் சங்க நிர்வாக குழு உறுப்பினராக சேர வரும் 23ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.  சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  
 சென்னை மாவட்டத்தில் சிறுபான்மையினர் கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடுவதற்காகவும், அவர்கள் சுயமாக தொழில் செய்திட வழிவகை செய்திடும்  வகையில், சிறு தொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 (தமிழ்நாடு சட்டம் 27/1975)ன் கீழ் சென்னை மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் என்ற அமைப்பு துவங்கிட நிர்வாக ஒப்புதல்  அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் கவுரவ செயலர், கவுரவ இணைச் செயலர், உறுப்பினர் என 6  கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.   இதன் சங்க  நிர்வாக  குழுவில்  உறுப்பினராக சேருவதற்கான  தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  இவர்கள் சமூக பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மிக்க ஆர்வத்துடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளோ, நீதிமன்ற வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது. இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதியதாக தேர்வு செய்யப்படுவர். இந்த நிபந்தனைகளுடன் சங்க  நிர்வாக குழுவில் இடம்பெற விரும்பும் சிறுபான்மையின கிறித்துவ சமுதாயத்தைச்  சார்ந்தவர்கள் விண்ணப்பத்தினை     வரும் 23ம்தேதிக்குள் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,  சிங்காரவேலர் மாளிகை, சென்னை -1 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Collector ,Christian Women's Association Executive Committee ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...