×

பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல்

பள்ளிப்பட்டு, டிச.12: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விளையாட்டு மைதானத்தை மீட்க கோரி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து. பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த மேல் நெடுங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இங்கு, 1 முதல் 5ம் வகுப்பு வரை 32 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியின் பின்புறத்தில் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த, மைதானத்தை உடற்பயிற்சி செய்வதற்கும், விளையாடுவதற்கும் மாணவர்களும், அப்பகுதி இளைஞர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சிலர், அந்த மைதானத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். இதனால், விளையாடுவதற்கு இடம் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து வருவாய் துறையில் புகார் செய்தனர். ஆனால், விளையாட்டு மைதானத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆக்கிரமிப்பு மைதானத்தை மீட்க கோரி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நேற்று முன்தினம் குறைத்தனர். மேலும், பள்ளிக்கு வந்த ஒரு சில மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து  பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ் பள்ளிக்கு வந்தார். மாணவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘மாலைக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி விளையாட்டு மைதானம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார். இதையடுத்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வாக்குறுதிப்படி விளையாட்டு மைதானத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தரப்பில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 இந்நிலையில், ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் நேற்றுகாலை கிராம மக்களுடன்  இணைந்து ெபாதட்டூர்பேட்டை - திருத்தணி சாலையில் உள்ள மேல் நெடுங்கல் பகுதியில்  மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளர் அற்புதராஜ் மற்றும் பொதட்டூர் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  கலெக்டரிடம் பேசி உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி விளையாட்டு மைதானம் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும்  கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Road ,parents ,school ,government school students ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி