×

துர்நாற்றத்தால் கடும் அவதி கழிப்பிடமாக மாறிய வாரச்சந்தை

காரைக்குடி, டிச.11: காரைக்குடியில் சந்தை பகுதியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பொது கழிப்பிடமாக மாற்றி வருவதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருவதோடு தெற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி கணேசபுரம் ரோட்டில் வாரசந்தை கொப்புடைய நாயகி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. 6 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள சந்தையில் 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காரைக்குடி, அரியக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சாக்கோட்டை, கல்லல், பெரியகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய மற்றும் சிறிய அளவில் கடைகள் போடப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடைபெறும் சந்தையில் காரைக்குடி சுற்றுப்புற மக்கள், அமராவதிபுதூர், சாக்கோட்டை உட்பட கிராம பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகிறார்கள். தவிர மீன், கருவாடு போன்றவைகளுக்கு என தனியாக கடை உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இச்சந்தையில் சுகாதாரம் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. சந்தையின் முன்பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டி கேட் அமைத்துள்ளனர். பின்புறம் சுற்றுச்சுவர் உடைந்து உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சந்தை பகுதியை பொது கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மது அருந்தும் இடமாகவும், சீட்டு விளையாடுவது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறி வருகிறது.

சமூக ஆர்வலர் கார்த்தி கூறுகையில். சந்தை பகுதியை பொதுகழிப்பிடமாக மாற்றி உள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. கழிவுகளில் அமரும் ஈ சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்களில் அமர்கின்றன. இதனால் தெற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. கோழிக்கழிவு, ஆட்டு கழிவுகள் மற்றும் இறந்துபோன கால்நடைகளை உள்ளே போட்டு விட்டு செல்கின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை. முட்புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு போன்ற விஷபூச்சி தொல்லை உள்ளது. சந்தையின் மெயின் கேட்டில் உள்ள மின் கம்பம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வருமானத்தை மட்டும் பார்க்கும் கோவில் நிர்வாகம் சந்தை பராமரிப்பை கண்டுகொள்வது இல்லை என்றார்.

தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், கழிப்பறை வசதி இல்லாத வீடுகளே இல்லை என அரசும், அதிகாரிகளும் கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற திறந்தவெளிகளை மக்கள் இன்னும் கழிப்பிடமாகத்தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தையில் உள்ள கடைகளை முறைபடுத்தி நிரந்தர கடை கட்டித் தரவேண்டும். மண் தரைக்கு பதில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும். சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்றார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...