×

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் ஜெயங்கொண்டம் ஏஐடியூசி பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், டிச. 7: ஏஐடியுசி சங்க பேரவை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் தம்பிசிவம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் காமராஜ், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏஐடியுசி மாநில நிர்வாககுழு உறுப்பினரும், சங்கத்தின் கவுரவ தலைவருமான தண்டபாணி சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன், சின்னதுரை ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை (2 டி) எண் -62 ன்படி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை கூதியம் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து வழங்கப்பட வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட தொழில் உபகரணங்கள் தரமான கையுறை மற்றும் சீருடை வழங்கப்பட வேண்டும். அசுத்தங்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உடல்நலத்தை பாதுகாத்திட ஆறு மாதத்திற்கு ஒருமுறை அனைவருக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.

மழைக்காலங்களில் பணி மேற்கொள்ள மழைக்கோட்டு. அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும், சேமநலநிதி மற்றும் புதிய பங்களிப்பு ஓய்வுதியம் பிடித்தம் தொகைக்கு அனைவருக்கும் கணக்கு சீட்டு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக வரும் 12ம் தேதி நகராட்சி நிர்வாகத்தை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் வீராசாமி, ஜெயா, லட்சுமி, உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணி செய்துவரும் நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை செயலாளர் சிலம்புச்செல்வி வரவேற்றார். இறுதியில் துணை செயலாளர் சீதா நன்றி கூறினார்.

Tags : meeting ,Jayankondam AITUC ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...