×

புதிய டெண்டர் விதிமுறை குளறுபடியால் வேலை வாய்ப்பு இழந்த 800 எல்பிஜி வாகனங்கள் முதல்வரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு

நாமக்கல், நவ. 21: புதிய டெண்டர் விதிமுறை குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ள 800 எல்பிஜி வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என, தமிழக முதல்வரிடம், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல்லுக்கு கடந்த 18ம் தேதி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் கணபதி, உதவித்தலைவர் தங்கவேல், துணைத்தலைவர் செந்தில், இணைச்செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: 2018-23ம் ஆண்டுக்கான டெண்டரில் தென்மண்டலத்தில் ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய ஆயில் நிறுவனங்களில் எல்பிஜி சங்கத்தின் சார்பில், சுமார் 7,500 வாகனங்கள் கலந்து கொண்டன. மத்திய அரசு  கொண்டு வந்த மாநில வாரியான டெண்டர் விதிமுறையில் பல்வேறு  குளறுபடிகள் இருந்ததால் ஓடிக்கொண்டிருந்த 800 எல்பிஜி வாகனங்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை இழந்துவிட்ட வாகனத்தின் விலை 30 லட்சமாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுதான், இந்த வாகனங்களை வாங்கியுள்ளோம். தற்போது வேலைவாய்ப்பு கிடைக்காததால், கடன் கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இந்த பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு, முதல்வர் எடுத்து சென்று, 800 வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

Tags : LPG truck owners ,
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்