×

ஈரோடு அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு சிகிச்சை

ஈரோடு, நவ. 15: ஈரோடு அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் பலர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 இருப்பினும் ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ஈரோடு அரசு மருத்துவமனையில் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிரிவு துவங்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:    ஈரோடு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளாக 3 ஆயிரத்து 137பேர் சிகிச்சை பெற்றனர்.

இதில் 388 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் 155பேர் கடும் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு மருத்துவ அதிகாரிகள் கூறினர்.

Tags : government hospital ,Erode ,
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி