×

ஆக்கிரமிப்பு கோயில் நிலத்தை மீட்க வழக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, நவ. 15: ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் நிலத்தை மீட்கக்கோரிய வழக்கில், அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பாலமலையில் பாலசுப்ரமணிய சாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. சில சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போதிய வருமானமும் இல்லாததால் கோயில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்  இல்லை. எனவே, பாலமலை பாலசுப்ரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், சட்டவிரோத விற்பனைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், ஆக்கிரமிப்பை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரூர் கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : temple land ,
× RELATED உசிலம்பட்டி அருகே கோயில் நிலத்தில்...