×

திருமயத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள் இருவீட்டாரும் அதிர்ச்சி

திருமயம், நவ.15: திருமயத்தில் கோயிலில் முகூர்த்த நேரத்தில் திடீரென மணமகள் திருமணம் வேண்டாம் என்று அடம் பிடித்ததால் திருமணம் நின்றுபோனது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். உறவினர்களுக்கு அழைப்பிதழும் கொடுத்தனர். திருமயம் கோட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணத்திற்கு வந்த உறவினர்களை வரவேற்க வரவேற்பு விருந்துக்கு மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக திருமயம் பெருமாள் கோயிலில் திருமணத்தை நடத்தி அதன் பின்னர் மண்டபத்தில் வரவேற்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கோயிலில் மணவறையில் மணமகன் மணமகளுக்காக மணக்கோலத்தில் காத்திருந்தார். அப்போது திடீரென மணமகள் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி மண மேடையில் இருந்து எழுந்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இரு வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். மணமகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் கூறியும் கடைசி வரை திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு வீட்டாரிடமும் சமரசம் பேசி பிரச்னையை
தீர்த்து வைத்தனர். தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள், உறவினர் கடும் வேதனை அடைந்தனர்.

Tags : bride ,
× RELATED மணப்பெண் மாயம்