×

புதுக்கோட்டை மாவட்டத்தில் உவர்நீர் இறால் பண்ணைகள் பதிவுச்சான்று பெறுவது கட்டாயம் கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை, நவ.15:  புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகள் பதிவுச்சான்று பெறவும் மற்றும் பதிவு சான்றின் உரிமத்தை புதுப்பித்திடவும் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.     
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளுக்கும் கடல்சார்நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக உரிய பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005-ன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவின்றி செயல்படக்கூடாது என இதன் வாயிலாக எச்சரிக்கப்படுகிறது.  தவறும் பட்சத்தில் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005ன்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச்சான்று ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது.  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச்சான்றின் உரிமத்தினை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
புதிதாக அமைக்கபெற்ற உவர்நீர் இறால் பண்ணைகள் பதிவுச்சான்றிதழ் பெற்றிட மற்றும் ஐந்தாண்டுகள் முடிவுற்ற பதிவுச்சான்றின் உரிமத்தினை புதுப்பிக்க மாவட்ட அளவிலான குழு புதுக்கோட்டை கடல்சார் நீர்வாழ் உயிரின வளாப்பு ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் உவர்நீர் இறால் பண்ணை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

 மேலும் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக தடைசெய்யப்பட்டுள்ள ஆன்டிபயோடிக் மருந்துப்பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாமெனவும், சுற்றுப்புற சுழலுக்கு மாசு ஏற்படுத்தாவண்ணம் நல்ல மேலாண்மை முறைகளை பயன்படுத்தி உவர்நீர் இறால் வளர்ப்பினை மேற்கொள்ளுமாறும் மற்றும் பண்ணைகளின் பதிவுச்சான்று விபரங்கள் உள்ளடக்கிய நிரந்தர பெயர் பதாகையினை அனைவரும் அறியும் வகையில் தங்களது பண்ணை வளாகத்தில் பொருத்தப்பட வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : collector ,district ,Pudukottai ,saline farms ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...