×

ஆலங்குடி பகுதியில் தொடர் மின்தடையால் விவசாயிகள் அவதி முற்றுகை போராட்டம் நடத்த எம்எல்ஏ முடிவு

ஆலங்குடி, அக்.16: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல இடங்களில் நீடிக்கிறது. கடந்த சில மாதங்களாக மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. மின்வெட்டினால் சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மின்வெட்டு பிரச்சனையால், விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் மின் தட்டுப்பாடு அதிகஅளவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக நம்பியுள்ளது.

ஆனால் தற்பொழுது நிலவி வரும் மின்சார தட்டுப்பாட்டால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் வழங்கப்படும் நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்காததால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் தவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இந்த மின் தட்டுப்பாடு பிரச்னையால், கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தினமும், ஆங்காங்கே குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் 15 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தியும் எந்த பகுதிக்கும் குடிநீர் செல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மின்பற்றாக்குறை இருப்பதால் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பகலில் மட்டுமின்றி, இரவிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை காப்பாற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதை சரி செய்ய புதுக்கோட்டை செயற்பொறியாளரிடம் கோரியபோது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, திருச்சி தலைமை பொறியாளரிடம் கோரிக்கை விடுத்தபோது, புதிதாக 18 டிரான்ஸ்பார்மர்களை வழங்கினர்.

மேலும், இப்பகுதியில் இன்னும் அதிகப்படியான டிரான்ஸ்பார்மர்கள் மாதக்கணக்கில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினாலும் அலட்சியப்போக்கோடு செயல்பட்டு வருகின்றனர். மேலும், தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக, தனியார் இடங்களில் ரூ.50 ஆயிரம் பணம் செலுத்தி டிரான்ஸ்பார்மர்களை சரிசெய்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இனிமேலும், காலதாமதம் செய்தால் விவசாயிகளை திரட்டி புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார்.

Tags : MLA ,area ,Alangudi ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்