×

சாலைக்கிராமத்தில் ஆக்கிரமிப்பால் சுருங்கும் கீழ்கங்கை ஊரணி அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

இளையான்குடி, அக்.16:  சாலைக்கிராமத்தில்  நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால்,  எதிர் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி தாலுகா சாலைக்கிராமம் வளர்ந்து வரும் ஊராட்சி. பத்து கிராமங்களை உள்ளடக்கி செயல்படும் இந்த சாலைக்கிராமம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 7 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த சாலைக்கிராமத்திற்கு வரகுனேஸ்வரர் கோயில் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள கீழ்கங்கை ஊரணி குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஊரணி ஓரங்களில்  ஊராட்சி சார்பாக போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊரணி கரைகளை சுற்றி   ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. கட்டிட இடிபாடுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாகவும் இந்த ஊரணி மாறிவருகிறது. மேலும் ஊரணிக்கு வரும் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால்  நீரோட்டம் குறைந்து சாலைக்கிராமம் பகுதியில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் அதலபாதாளத்தில் சென்றுவிடுகிறது.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பால், வரும் காலத்தில் இந்தப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், சாலைக்கிராமத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் ஜெயகாந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தராஜன் கூறுகையில், ‘‘இந்த ஊரணியில் எந்த அளவிற்கு தண்ணீர் தேங்குதோ அந்த அளவிற்கு நீரோட்டம் பெருகி, குடியிருப்புகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் அதிக அளவில் உற்பத்தியாகும். நிர்நிலைகளில் தொடரும் ஆக்கிரமிப்பால் வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவது உறுதி. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Urban Officers ,village ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...