×

சிவகங்கை நகராட்சியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

சிவகங்கை, அக்.16:  சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட ஊருணிகளே குடிநீர் ஆதாரங்களாக விளங்கின. பின்னர் சிறிய போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1974ம் ஆண்டு இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை இணைக்கப்பட்டு காவிரி நீரும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கோடை காலத்தில் மட்டும் குடிநீர் வழங்கலில் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இடைக்காட்டூர் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பைப் லைன் அமைக்கப்பட்ட நிலையில் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையாததால் இத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படவில்லை.

ஏற்கனவே உள்ள இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்ட மோட்டார்கள் பழுதாகியுள்ளது. அவற்றை சரி செய்யாததால் தற்போது அந்த திட்டத்தில் உள்ள குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால் காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் பெறப்பட்டு வருகிறது. காவிரி நீரை மட்டும் வைத்து நகராட்சி முழுவதிலும் குடிநீர் வழங்குவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நகராட்சியில் மொத்தம் 9 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. அனைத்திற்கும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோடைகாலத்தில் மட்டுமே குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மழைக்காலத்திலேயே நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கிறது. போதிய குடிநீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகிறோம். இரண்டு வாரங்களாக பிரச்சினை இருந்தும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் வீட்டில் உள்ள போர்வெல் நீர் உட்பட கிடைக்கும் நீரை குடிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : municipality ,Sivagangai ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு