×

படிக்கும் காலங்களில் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்

இலுப்பூர், அக்.12: படிக்கும் காலங்களில் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் தெரிவித்தார். அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நேற்று நடைபெற்றது. குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை வகித்து, மாணவர் மன்றத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கல்வி ஒரு மனிதனை முன்னேற்றும். இன்றைய கால சூழ்நிலையில் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் மாணவர் மன்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. மாணவர் மன்றங்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் பட்டிமன்றக்குழு, மலையேறும் குழு, கலாச்சாரக்குழு, இலக்கியக்குழு போன்ற பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் திறமைகளுக்கேற்ப பல்வேறு துறைகளில் சாதனை செய்ய முடியும்.

எனவே கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற மாணவர் மன்றங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் காலங்களில் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி உடல் நலன் பாதுகாக்க வேண்டும். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எழுதிக்கொண்டு அரசுப்பணிகளுக்கு செல்லும் வகையில் கல்லூரி நூலகத்திற்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.  ஆத்மா திட்டத்தின் கீழ் அடர்த்தீவன உற்பத்திமுறை ஆராய்ச்சிக்கு ரூ.1லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல கூடுதலாக போட்டி தேர்வுக்குரிய புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய உலூய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ