×

வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

செந்துறை,அக்.12: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள தெத்தேரி பகுதி வெள்ளாற்றிலிருந்து அனுமதியின்றி வாகனங்களில் மணல் கடத்தப்பட்டு வருவதும், அவர்கள் மீது தளவாய், குவாகம் மற்றும் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த வாரத்தில் இரு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். இந்நிலையில், நேற்று காலை தளவாய் காவல்நிலைய போலீசாருக்கு சிமென்ட் ஏற்றும் டாரஸ் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலால், காவல் நிலையம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், வெள்ளாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் கொட்டாமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. லாரிகளை பறிமுதல் செய்த சப்இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான தளவாய் போலீசார், லாரி டிரைவர்கள் சேலத்தை சேர்ந்த சபரிவாசன்(27), முருகேசன்(29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், லாரியின் உரிமையாளர் மீதும், மணல் ஏற்றி அனுப்பிய முள்ளுக்குறிச்சி  பன்னீர்செல்வம்(56) மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்னை தாக்கியவர் கைது: அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் மேலதெருவை சேர்ந்தவர் செங்கமலம் மனைவி செல்வமணி(32). அதே பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மனைவி செல்வம்(52). இவர்கள் இரு குடும்பங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வமணியிடம் செல்வம் இடப்பிரச்னை சம்மந்தமாக பேசியுள்ளார். அப்போது வாய்தகராறு ஏற்பட்டடது, இதில் செல்வம், அவரது மகள் ஜெயா (24), மகன் கொளஞ்சி(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வமணியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வமணி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் செல்வமணி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் திருடிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் தத்தனூர் பகுதியில் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(47), ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்(55)என்பதும் இவர்கள் நாச்சியார்பேட்டை ஓடையில் மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மது விற்றவர் கைது: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழநத்தம் நடுத்தெருவை சேர்ந்த ராஜா (36) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...