×

திருப்புத்தூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டெருமை

திருப்புத்தூர், அக். 12:  திருப்புத்தூர் அருகே கிராமத்தில் காட்டெருமை புகுந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மாட்டு இனங்களில் மிகப்பெரிய அளவில் காணப்படும் காட்டெருமை மலைப்பகுதிகளுக்குள் மட்டும்தான் தென்படும். கடந்த 3 நாட்களாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கும்மங்குடி, மணமேல்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, நகர வயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் காட்டெருமை உலா வருகிறது. ஒற்றை காட்டெருமையாகத் திரியும் இதனை கிராம மக்கள் ஊருக்குள் வரவிடாமல் ஆற்றுப்பகுதி, கண்மாய்ப் பகுதிகளில் திருப்பி விரட்டி விடுகின்றனர். இருப்பினும் நேற்று வயிரவன்பட்டி கிராமத்திற்குள் புகுந்த காட்டெருமை அமைதியாகக் காணப்பட்டது. தெருக்களைச் சுற்றி வந்த இந்த காட்டெருமை மீண்டும் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

இப்பகுதியில் சுற்று வட்டாரங்களில் இவ்வகையான இன மாடுகள் கிடையாது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பூலாங்குறிச்சி மற்றும் பிரான்மலை மலைப்பகுதியில் இவ்வகையான காட்டெருமைகள் காணப்படுகின்றன. அப்பகுதியிலிருந்து பிரிந்து வந்த இந்த இன மாடு திரும்பவும் அதன் பகுதிக்கு தானாகச் சென்றுவிடும்’ என்றனர். இருந்தாலும் காட்டுப்பகுதிகளில் திரியும் இதுபோன்ற காட்டெருமை, திடீரென ஊருக்குள் வந்ததால் கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர். எனவே காட்டெருமை சுற்றித்திரியும் பகுதிக்கு வனத்துறையினர் சென்று காட்டெருமையை அது சார்ந்த காட்டுப்பகுதிக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : village ,Tiruputhur ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...