×

மது விற்பனையை நிறுத்தக் கோரி டாஸ்மாக் கடைமுன் பெண்கள் முற்றுகை

பந்தலூர், அக்.5:  பந்தலூர் அருகே தேவாலாவில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மூடப்பட்டது.  பந்தலூர் அருகே தேவாலா பஜாரில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவந்தது. நீதிமன்ற  உத்தரவின்படி நெடுஞ்சாலையோரத்தில் இருந்த இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதன்பின் தேவாலா பஜாரில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடை திறப்பதில் இழுபறி நீடித்து வந்தது.  இந்நிலையில், தேவாலா அருகே அத்திக்குனு சாலையில் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது. இதையடுத்து, அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் கொண்டு வந்த அடுக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 1 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு மது விற்பனையை தடுத்து நிறுத்தினர். மேலும் மதுக்கடையை உடனே மூடவேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மாலை 4 மணி வரை மதுக்கடை முற்றுகை போராட்டம் நீடித்தது. தகவலறிந்து கூடலூர் தாசில்தார் மகேந்திரகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினார்.  அப்போது குடிமகன்கள் ஒரு சிலர் வந்து இப்பகுதியில் மதுக்கடை இல்லாததால் பந்தலூர் மற்றும் உப்பட்டிக்கு ஆட்டோவில் சென்று மது குடிக்கிறோம். அலைச்சலை தவிர்க்க கூடுதல் மதுபாட்டில் வாங்கி வரும் போது போலீஸ்காரர்கள் பிடிக்கின்றனர்.

எனவே, மதுக்கடையை மூடக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை முன் முற்றுகையிட்ட பெண்கள் அகலாத நிலையில், கடையை மூடும் படி தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து மாலை 5 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுக்கடையை மூடி விட்டு சென்றனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு