×

திருப்புவனம் அருகே கீழடி கோயிலில் மருத மரக்கன்று

திருப்புவனம், செப்.25: கீழடி அர்ச்சுனலிங்கேஸ்வரர் கோயிலில் அழிந்துபோன பழமையான மருத மரம் மீண்டும் நடப்பட்டது.திருப்புவனம் அருகே கீழடியில்  அர்ச்சுனலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு காலத்தில்  மருதமரம்   தல விருட்சமாக இருந்தது. நாளடைவில் இம்மரம் அழிந்துவிட்டது. இதனிடையே, மதுரை தல விருட்சம் தன்னார்வ  அமைப்பு, இக்கோயிலில் மீண்டும் மருதமரத்தை நட்டுள்ளது. இது குறித்து தலவிருட்ச அமைப்பாளர் டாக்டர் சிவகுருநாதன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. மழை பொழிவது அரிதாகி வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாகி வருவது முக்கிய காரணமாக உள்ளது. அந்த காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்தது. விவசாயம் செழித்தது. ஆனால் நகர்மயமாக்கலால் மழை மேகங்களை ஈர்க்கும் மரங்கள் இல்லை.  எங்கள் அமைப்பு சார்பில் 5 ஆயிரம் மரங்கள் பாட்டம், பொட்டப்பாளையம், பனையூர் பகுதிகளில் நடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கோயில் இருக்கும். அதற்கான தல விருட்சங்களும் இருந்துள்ளன. அந்த தல விருட்சங்கள் மழை மேகங்களை ஈர்க்கும் தன்மையுடையவை. அதனால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.ஆகவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமக்கோயில்களிலும் தலவிருட்சங்களை கண்டறிந்து, அந்த மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சீனிவாசன், கோவிந்தன், என்ஜினியர் நாராயணன், வங்கி அதிகாரி மாணிக்கம், கீழடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்  கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...