×

கண்மாய், ஊரணி ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, செப். 21: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையடுத்து கண்மாய், ஊரணி, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் அறிவுறுத்தினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், தாசில்தார் அலுவலகங்களில் இயங்கும் மழை மானிகள் சரியான நிலையில் இயங்குகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நீர்நிலைகளின் கரைகள் பலமாக உள்ளனவா, உடைப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை வருவாய் ஆய்வாளர்கள், மண்டலத் துணை தாசில்தார்கள் மற்றும் தாசில்தார்கள் ஆய்வு செய்து கரைகள் பலப்படுத்த வேண்டிய இடங்கள், உடைப்புகள் அடைக்கப்பட வேண்டிய இடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பட்டியலிட்டு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்தறை மூலம் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

கண்மாய், ஊரணி குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றும் போது ஏதேனும் இடையூறு இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, நீர்வள ஆதார உயர் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...