×

கால்வாய்களில் உள்ள சிமெண்ட் தளத்தால் சரியும் நிலத்தடி நீர்மட்டம் தண்ணீர் நிலத்தில் இறங்க வழியில்லை

மதுரை, செப்.21: கிருதுமால் நதி உள்ளிட்ட 9 கால்வாய்கள் மதுரை நகரில் உள்ளன. இந்த கால்வாய்கள் மதுரை பகுதி மக்களுக்கு நிலத்தடி நீராதாரமாக இருந்தது. கால்வாய்களில் தண்ணீர் ஓடிய போது நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மக்களுக்கு தண்ணீர் பிரச்னையே இருந்தது இல்லை.இந்நிலையில் மாநகராட்சியின் சீரமைப்பு காரணமாக அனைத்து கால்வாய்களையும் சுருக்கினர். கால்வாய்களில் இரண்டு பக்கமும் சிமெண்ட் சுவர் எழுப்பி, தரைப்பகுதியை முற்றிலும் கான்கிரீட் தளம் போட்டு மூடிவிட்டனர். கீழ்தளம் போடும் போது 50 அடிக்கு ஒரு மழைநீர் சேமிப்பு குழி போட வேண்டும் என்பது ஒப்பந்த விதி, அதையும் மீறி முற்றிலும் கால்வாயை மூடினர். இதனால் இந்த கால்வாயில் செல்லும் தண்ணீரை நிலம் உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கி தற்போது 600 அடிக்கும் கீழே உள்ளது.

கடந்த 5 ஆண்டுகள் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தற்போது பருவமழை பெய்து தண்ணீர் கால்வாயில் சென்றது. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. பொதுமக்களுக்கு இன்னும் தொடர்ந்து தண்ணீர் பிரச்னை உள்ளது. குடிக்க நல்ல தண்ணீர்தான் கிடைக்கவில்லை. வீட்டில் புழங்க தண்ணீர் வேண்டும். இதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தண்ணீர் நிலத்திற்குள் செல்ல, கால்வாய்களின் அடிப்பாகத்தில் உள்ள சிமெண்ட் தளத்தை உடைக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிலத்தடிக்கு செல்லும். அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த கோரிக்கையை ஏற்று மதுரை நகரில் உள்ள கால்வாய்களின் சிமெண்ட் தளத்தை உடைக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்