×

தாணிப்பாறையில் கடை உரிமையாளர்கள் அவதி கடைகளை அடைக்கச் சொல்லி போலீசார் கெடுபிடி

வத்திராயிருப்பு, ஆக. 14:  வத்திராயிருப்பு அருகே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சுந்தரமகாலிங்கம் கோவில் வரை மதுரை மாவட்ட போலீஸார் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறை கேட் பகுதியில் இருந்து வண்டிப்பண்ணை தற்காலிக பஸ்நிலையம், ராம்நகர், மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம், வத்திராயிருப்பு, மாவூற்று உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் நேற்று நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டத்துக்கு பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என போலீசார் கூறி, நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வனத்துறை கேட் பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகள் முழுவதையும் அடைக்க வேண்டும் என கெடுபிடி காட்டினர்.

மேலும், தோப்புகளில் தங்கியிருந்த பக்தர்களையும் வெளியேறி ஊர்களுக்கு செல்லக்கோரினர். அப்போது கடைக்காரர்கள், ‘கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஆயிரக்கணக்கில் வாடகை கொடுத்து, கடை நடத்தி வருகிறோம். திடீரென கடைகளை அடைக்கச் சொன்னால் எப்படி என கேட்டனர். இருப்பினும் கடைக்காரர்கள் கடைகளை மூட ஆரம்பித்தனர். மேலும், புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம், ‘திடீரென கடை அடைக்கச் சொல்கிறீர்கள். பக்தர்கள் குறைந்த அளவே வந்துள்ளதால் வியாபாரமும் இல்லை’ என்றனர். பின்னர் அரை மணி நேரத்துக்கு பின்னர், மீண்டும் கடைகளை திறந்து கொள்ளுங்கள் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், கடை உரிமையாளர்கள் நேற்று முன் தினம் இரவே கடைகளை காலி செய்துவிட்டு சென்றனர். போலீசாரின் கெடுபிடியால் பல கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு