×

சிவகாசியில் ஆறாண்டாக ஆக்கிரமிப்பு அகற்றம் இல்லை

* அகலம் குறைந்த தெருக்கள், சாலைகள் * வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சிவகாசி, ஆக. 14:  சிவகாசி நகராட்சியில் ஆறாண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், தெருக்கள், சாலைகள் அகலம் குறைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளிலும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நகர் பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.   ஆனால், சிவகாசி நகராட்சி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலை போக்குவரத்து வசதியே  தற்போதும் உள்ளது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப சாலை, நகர் பகுதி விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், வாகன பெருக்கத்தால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

நகரின் முக்கிய வீதிகளான கீழரத வீதி, மேல ரதவீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள், அதிகளவில் புதிது புதிதாக திறக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு முன்பு போதிய இடவசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஸ்டால்கள், தட்டி போர்டுகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், நகர் பகுதிக்கு டூவீலர், கார்களில் வருவோர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இது போன்ற நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை பள்ளி நேரங்களில் இந்த பகுதிகளை கடந்து செல்வதே மாணவர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அடிக்கடி  வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. சிவகாசி நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால், சிவகாசி நகர் ஊராட்சி பகுதியைப் போல தெருக்கள் அகலம் குறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் சிவகாசி பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிங்கள், கடைகளை அகற்ற கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், சிவகாசி நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது.   புதிதாக தொடங்கப்படும் வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் துவங்கப்படுகிறது. இந்த  வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் சிவகாசி நகருக்குள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் வாகன பெருக்கததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருந்து நகரை விட்டு வெளியே செல்லும் அவலம் உள்ளது. சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முன் நகரில்  உள்ள முக்கிய சாலைகள், ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிங்களை அகற்றி நகரை விரிவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை