×

என்டிசி தொழிலாளர் சம்பள பேச்சு வார்த்தை துவங்கியது

கோவை: என்டிசி மில் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை நேற்று கோவையில் துவங்கியது. இதில் தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வரும் 20ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும், என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தின் (என்டிசி) கீழ் தமிழகத்தில் 7 மில்கள் உள்ளன. அவை கோவையில் கம்போடியா, பங்கஜா, சி.எஸ்.அண்ட் டபிள்யூ., முருகன், ரங்கவிலாஸ் ஆகிய 5 மில்களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் காளியப்பா மில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலுள்ள பயனியர் மில் ஆகியவையாகும். இந்த மில்களில் நிரந்தரம் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். என்டிசி நிர்வாகம், தொழிற்சங்கங்கள் இடையேயான சம்பள ஒப்பந்தம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய சம்பள ஒப்பந்தம் இதுவரை ஏற்படுத்தவில்லை.

இதனால் வரும் 20ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும், என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப், ஏடிபி ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் கோவை மண்டல என்டிசி நிர்வாகம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் என்டிசி தரப்பில், செயல் இயக்குநர் குங்குமராஜா, துணை பொது மேலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் சீனிவாசன், ஆறுச்சாமி (ஐஎன்டியுசி), சேவியர், ராஜேந்திரன் (சிஐடியு), பார்த்தசாரதி, நாகேந்திரன் (எல்பிஎப்), தனகோபால், கோபால் (ஏடிபி) ஆகியோர் பங்கேற்றனர்.

செயல் இயக்குநர் குங்குமராஜா பேசுகையில், சம்பள பேச்சு வார்த்தையை வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தலாம். அன்று என்டிசி மனிதவள இயக்குநர் சின்கா பங்கேற்கிறார். அவர் தலைமையில் முடிவெடுக்கலாம்.’ என்றார். இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாமல் முடிந்தது. இதுகுறித்து ஐஎன்டியுசி தலைவர் சீனிவாசன் கூறுகையில், என்டிசி நிர்வாகத்துடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், மத்திய தொழிலாளர் துறை கமிஷனர் தலைமையில் இன்று (14ம் தேதி) கோவை என்டிசி மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப், ஏடிபி சங்க நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதில் பங்கேற்க உள்ளோம். இப்பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படாவிட்டால், திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி முதல் தமிழகத்திலுள்ள 7 என்டிசி மில்களிலும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை