×

சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

திருப்புத்தூர், ஆக. 14: திருப்புத்தூர் அருகே, திருக்கோஷ்டியூர்  சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோயிலில், ஆண்டாள் பிறந்தநாளை முன்னிட்டு ஆடிப்பூர உற்சவம் கடந்த 3ம் தேதி சேனை முதல்வர் பறப்பாட்டுடன தொடங்கியது. ஆக. 4ம் தேதி பெருமாளும், ஆண்டாளும் காலையில் திருமண மண்டபம் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இரவு ஆண்டாளும், பெருமாளும் திருவீதி புறப்பாடு நடந்தது. 2ம் திருநாள் முதல் 9ம் நாள்வரை தினந்தோறும் காலையில் ஆண்டாளும், பெருமாளும் சிம்ம, அனுமார், கருடசேவை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடந்தது.

7ம் திருநாளன்று அலங்கார திருமஞ்சனமும், இரவு ஆண்டாளும், பெருமாளும் தங்கப்பல்லாக்கில் மாலை சூர்ணாபிஷேகமும், திருவீதி புறப்பாடும் நடந்தது. 9ம் திருநாளன நேற்று முன்தினம் மாலை தலையலங்காரம் ஏற்றுதல், ஆண்டாளும், பெருமாளும் அன்ன வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடந்தது. 10ம் நாளான நேற்று காலை 9.45 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.30 மணியளவில் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. 11ம் திருநாளன இன்று காலையில் தீர்த்தவாரியும், இரவு தங்கத் தோளுக்கினியானில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...